தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிகளில் ஒரே மாதத்தில் 130 பேரை கடித்து குதறிய தெருநாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில் தெருக்களில் சுதந்திரமாக சுற்றி திரியும் இந்த நாய்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

குறிப்பாக இந்த தெருநாய்கள் சாலையில் செல்வோர் மற்றும் வாகனத்தில் செல்வோரை துரத்தி துரத்தி கடித்து வருவது அடிக்கடி நிகழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் முக்கிய தெருக்களில் வாக்கிங் செல்வோரை விடாமல் துரத்திவருகின்றன. நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

தினமும் நாய்கடியால் மூன்று நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்த அப்பகுதியினர், இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் பொதுமக்களின் நலன்கருதி சாலையில் சுற்றி திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.