நீதிமன்றங்கள் அதிகரிப்பதற்கான காரணம் மக்களின் விழிப்புணர்வே...! சட்டத்துறை அமைச்சர்...!! 

நீதிமன்றங்கள் அதிகரிப்பதற்கான காரணம் மக்களின் விழிப்புணர்வே...! சட்டத்துறை அமைச்சர்...!! 

தமிழகத்தில் நீதிமன்றங்கள் அதிகரிப்பதற்கான காரணம் குற்றங்கள் அதிகரிப்பதால் அல்ல, மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிப்பதால் தான் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் நடந்த நீதிமன்ற திறப்பு நிகழ்வில் பேசியுள்ளார்.

சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காசோலை மோசடி வழக்குகளுக்கான இரண்டு கூடுதல் நீதிமன்றங்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குகளுக்கான ஒரு கூடுதல் நீதிமன்றம், சிறிய வழக்குகளுக்காக மெய்நிகர் முறையிலான ஒரு நடமாடும் நீதிமன்றம், ரயில்வே சட்ட வழக்குகளுக்கான ஒரு நடமாடும் நீதிமன்றம் ஆகியவற்றை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, டி.பரத சக்ரவர்த்தி, மாவட்ட முதன்மை எஸ்.அல்லி, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், எழும்பூர் வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தன்பாபு, செயலாளர் துரைக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்திய ஒன்றியத்திலேயே அதிக நீதிமன்றங்களை திறக்க வேண்டுமென்ற முனைப்புடன் சென்னை உயர் நீதிமன்றம் செயல்படுவதாக குறிப்பிட்டார். குற்றங்கள் அதிகமானதால் தான் அதிக நீதிமன்றங்கள் துவங்குவதாக எண்ண வேண்டாம் என்றும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக நீதிமன்றங்கள் துவங்கப்படுகின்றன என தெரிவித்தார்.

1747 கோடி ரூபாயை நீதித்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டை விட இது 285 கோடி ரூபாய் அதிகம் என்றும் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க நீதித்துறை கோரிக்கைகளை நிறைவேற்றும்படி முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக ரகுபதி குறிப்பிட்டார்.

இதையும் படிக்க:தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் -சிறப்பு பார்வை...!!