யானைகள் செல்லும் பாதையில் செங்கசூளையா?

யானை வழித்தடத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பதை செங்கற்சூளை உரிமையாளர்கள் உறுதிபடுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

யானைகள் செல்லும் பாதையில் செங்கசூளையா?

யானை வழித்தடத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பதை செங்கற்சூளை உரிமையாளர்கள் உறுதிபடுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி யானைகள் நல ஆர்வலரான முரளிதரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட் போன்ற அக்கிரமிப்புகளையும், செங்கல் சூளைகளையும் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி, யானைகள் வழித்தடத்தின் ஒரு பகுதி மீட்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற பகுதிகளையும் மீட்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சட்டவிரோத ரிசார்ட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 172 செங்கற்சூளைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சூளை உரிமையாளர்கள் தரப்பில், சூளைகள் மூடப்பட்டதற்கு சட்டவிரோதமாக  இயங்கியது மட்டும் காரணமில்லை என்றும், உரிமம் புதுப்பிக்காததாலும்  மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கோவை மலையடிவாரத்திலிருந்து நீலகிரி வரையிலான அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்ததாக அறிக்கையில் குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டினர். மேலும்  செங்கல்சூளை அல்லது ரிசார்ட் அமைக்கப்பட்டுள்ளதா என அப்பகுதிகளை முழுமையாக ஆராய்ந்து, புதிய அறிக்கை தாக்கல் செய்ய உத்ததவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்கள் தள்ளிவைத்தனர்.

விலங்குகள் செல்லும்.பாதையை ஆக்கிரமிக்கவில்லை என்பதை செங்கற்சூளை உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் எனவும், அதை மீறுபவர்களிடம் நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் பெற்றபின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தினர்.