மாண்டஸ் புயல்...சேதங்களும், துரித நடவடிக்கைகளும்...!

மாண்டஸ் புயல்...சேதங்களும், துரித நடவடிக்கைகளும்...!

மாண்டஸ் புயல் கரையைக் கடந்த போது வீசிய சுழல் காற்றால் சென்னை கோயம்பேடு அருகே ராட்சத மரம் சாலையில் விழுந்தது.

மாண்டஸ் புயல் கடந்து வந்த பாதை...சேதங்களும், துரித நடவடிக்கைகளும்:

1. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய மாண்டஸ் புயல் நேற்றிரவு கரையைக் கடக்க  தொடங்கிய போது 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோமீட்டர்  வேகத்தில் காற்று வீசியது. இதன்காரணமாக, கோயம்பேடு ஜெகன்நாதன் நகர் முதல் மெயின் ரோட்டில் இருந்த ராட்சத மரம் விழுந்தது. கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு மரத்தை அகற்றினர். மேலும் இப்பகுதியில் அதிக மரங்கள் விழுந்து கிடப்பதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன.

2. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள திருவள்ளுவர் சாலையில் மாண்டஸ் புயல் தொடர்மழையின் காரணமாக தீடீரென பள்ளம் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்த நிலையில், தகவலின் பேரில் விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர் ஜல்லிக் கற்கள் மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு பள்ளத்தை சீரமைத்தனர்.

3. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள படகு இல்லத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், சாமியார்பேட்டை கடலோர கிராமம் அருகே கடல் அலைகள் ஆர்ப்பரித்துக் காணப்பட்டதால் படகுகள் பாதுகாப்பான இடங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

4. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னழகு என்பவரது வீட்டின் பக்கவாட்டு சுவர், பலத்த காற்றால் திடீரென இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. சத்தம் கேட்டு வெளியேறிய குடும்பத்தினர் உயிர்தப்பினர். தகவலறிந்த சிங்கம்புணரி வட்டாட்சியர், சின்னழகு குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

5. 'மாண்டஸ்' வலுவிழந்து புயலாக மாறி கரையை கடந்தபோது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.  

இதையும் படிக்க: கரையை கடந்த மாண்டஸ்...இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!

6. இதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. 12 புதுச்சேரி அரசு பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டதாக போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்தது.

7. மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற வாரச் சந்தை வெறிச்சோடியது. பாதுகாப்பு காரணமாக பொதுமக்கள் வராததால் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பொருட்கள் வியாபாரம் ஆகவில்லை. இதனால் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

8. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 19 கண்மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததால் இரும்பு ஷட்டர் சுவற்றில் மோதிக் கொண்டிருந்தது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் ஷட்டர் சேதமடையாமல் தடுக்க 100 அடி நீரைத் திறந்து விடப்பட்டது.

9. இலங்கையிலும் மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இலங்கையின் யாழ்ப்பானம் மாவட்டத்தில் நீர்வேலி, கந்தன், நவக்கிரி மற்றும் கோப்பாய் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் வாழைக் குலையுடன் முறிந்து விழுந்தன. இதேபோல, யாழ்ப்பாணம் கந்தர் மடம் பகுதியில்  வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு  பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல, வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்த குளம், நெடுங்கேணி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடை நிலையில் இருந்த 800க்கும் மேற்பட்ட பப்பாசி மரங்கள் முறிந்து வீழுந்தன.

தமிழகத்தை புரட்டி போட்ட “மாண்டஸ் புயல்” தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.