11 மணி வரை பள்ளி திறக்கப்படாததால் வாசலில் காத்திருந்த மாணவர்கள்...!

11 மணி வரை பள்ளி திறக்கப்படாததால் வாசலில் காத்திருந்த மாணவர்கள்...!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே இருக்கை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை மொத்தம் 104 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக் கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் பெற்றோர்கள், கிராம மக்கள் ஆகியோர்  பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக புதிய கட்டிடம் கட்ட வேண்டி மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்து உள்ளனர். 

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் பள்ளிக் கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளதால் தற்காலிக கொட்டகை அமைத்து தரும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று மாணவர்கள் பள்ளிக்கு வந்த போது பள்ளி பூட்டப் பட்டிருப்பதை கண்டு மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியர் கீதாவை தொடர்பு கொண்ட பெற்றோர்கள் ஏன் பள்ளி திறக்கவில்லை என்று கேட்டப் போது பள்ளி தற்போது அங்கு இயங்க வில்லை என்றும் சமூதாய கூட கட்டிடத்தில் இயங்குகிறது என்றும் மாணவர்களை அங்கு வர சொல்லுங்கள் என்றும் அலட்சியமாக தெரிவித்துள்ளார். 

பள்ளி இடமாற்றம் பற்றி மாணவர்களிடமோ, பெற்றோர்களிடமோ முன் கூட்டியே தகவல் தெரிவிக்காமல் இருந்ததால் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களை மீண்டும் பள்ளிக்கே அழைத்து வந்தனர். இந்த நிலையில் பள்ளி பூட்டப் பட்டிருந்ததால் மாணவர்கள் பள்ளி வாசலிலே காத்திருந்தனர். இது குறித்து பெற்றோர்களிடம் கேட்டபோது தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சமூதாய கூட கட்டிடம் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதாகவும் அந்தக் கட்டிடத்தில் ஏற்கனவே ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும் அந்த சமுதாய கூடத்திற்கு அருகிலேயே இரண்டு குளங்கள் இருப்பதாலும் அந்த இடம் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அங்கு கழிவறை கூட இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுக்கு வகுப்புகள் பள்ளியிலேயே இயங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பள்ளி முன்பு காத்திருப்பில் ஈடுபட்டனர். 

அதுவரையிலும் பள்ளியின் சார்பாக தலைமை ஆசிரியரோ, மற்ற ஆசிரியர்களோ பள்ளிக்கு வராததால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மாணவர்களுக்கு தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதாமல் பள்ளியின் வாசலிலே காத்திருந்தனர். இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர், பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தேர்வு முடியும் வரை பள்ளி கட்டிடம் திறக்கவும், தேர்வு முடிந்தவுடன் புதிதாக ஷெட் அமைத்து கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததன் பேரில் பள்ளிக்கூடம் திறந்து மாணவர்கள் உள்ளே சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது