தொடங்கியது... மாளிகைமேடு மூன்றாம் கட்ட அகழாய்வு...!!

தொடங்கியது... மாளிகைமேடு மூன்றாம் கட்ட அகழாய்வு...!!

கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேட்டில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியினை 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோட்டாட்சியர் பரிமளம் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் புகழ்பெற்ற சோழப் பேரரசின் இரண்டாவது தலைநகரமாக கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ளது. முதலாம் ராசராசசோழனின் மகனும் அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்தவருமான முதலாம் ராசேந்திரனால் இந்நகரமானது சோழ நாட்டின் தலைநகராக தோற்றுவிக்கப்பட்டது.

முதலாம் ராஜேந்திரன் கங்கை வரை படை எடுத்து சென்று வெற்றி பெற்ற தனது  பயணத்தை நினைவு கூறும் வகையில் தஞ்சாவூரில் இருந்த தலைநகரத்தை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றி அமைத்தான். கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கிய முதலாம் ராஜேந்திரனின் ஆட்சியின்போது முடிகொண்ட சோழன் திருமாளிகை, கங்கைகொண்ட சோழன் மாளிகை, சோழ கேரளம் திருமாளிகை என்ற பெயரில் இங்கு பெரிய அரண்மனைகள் கட்டப்பட்டிருந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேடு என்ற  பகுதியில் கடந்த (2020 - 2022) அகழாய்வு மேற்கொண்டது. இதில் செங்கல் கட்டுமானங்களுடன் பல்வேறு வகையான பானையோடுகள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதிக அளவில் இரும்பு ஆணிகள், செம்பினால் ஆன பொருட்கள், செப்பு காசுகள், தங்க காப்பு, கண்ணாடி மணிகள் மற்றும் வளையல் துண்டுகள், தந்தத்தினால் ஆன பொருட்கள், வட்டச் சில்லுகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் கெண்டி மூக்குகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 11 மற்றும் 12ம் நூற்றாண்டுகளில் தமிழகம் சீனாவுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை வெளிப்படுத்துகின்றன.

கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வு பணிகள் 2021 மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக 5 அகழாய்வு குழிகளை கொண்ட 17 கார்பகுதிக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழ்வாயில் மொத்தம் 1003 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று இரண்டாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த 11- 2 -2022 அன்று காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். இப்பணியானது பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன. இதில் ஐந்து அகழ்வாய்வு குழிகளைக் கொண்ட 19 கார் பகுதி குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவ்வகழ்வாய்வில் மொத்தம் 1010 பொருட்கள் கிடைக்கப்பட்டுள்ளன.

மேலும், மூன்றாம் கட்ட  அகழ்வாரச்சினை துவங்க 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று கோட்டாட்சியர்  பரிமளம் துவக்கி வைத்துள்ளார். இதன் மூலம் அரண்மனையின் எஞ்சிய பகுதிகளை அகழ்வாராய்ச்சி செய்யும் பணி துவங்கி உள்ளது. இதற்கு 10 க்கு 10 என்ற அளவீடுகளில் குழிகள் தோண்டும் பணியை  துவங்கி உள்ளனர். தற்போது 15 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.