மீண்டும் நீதிமன்றங்களில் காணொளி காட்சி விசாரணை ஆரம்பம்...!

மீண்டும் நீதிமன்றங்களில் காணொளி காட்சி விசாரணை ஆரம்பம்...!

கொரோனா தொற்று பரவி வருவதால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் காணொளி காட்சி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் அறிவித்துள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பமான கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க ஆரம்பித்து 2020 மார்ச் மாதம் உலகையே அச்சுறுத்தும் மிககொடிய வைரஸாக உருமாறியது. இதனால் உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியே வரமுடியாமல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர். இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும் நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தும், பின்னர் நீதிமன்றங்களில் இருந்தும் காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரணை செய்து வந்தனர். அதன்பிறகு கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியதால் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு, கடந்த 2022 பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இதையும் படிக்க : ஆளுநர் பதவிக்கு அழகல்ல...ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க ஆரம்பித்திருப்பதால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் காணொளி காட்சி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேரடி மற்றும் காணொளி காட்சி என கலப்பு விசாரணை நடைமுறை ஏப்ரல் 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், இந்த வசதியை வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்யும் வசதியையும் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.