பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் யுத்தம்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி...

பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் உண்மையான யுத்தம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் யுத்தம்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி...
தமிழக பாஜக தலைவர் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
 
பெகாசஸ் செயலி மூலம் இந்தியாவில் உள்ள பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் யாரும் உளவு பார்க்கப்படவில்லை. வேண்டும் என்றே நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னே இந்த குற்றச்சாட்டு பரப்பப்பட்டு திட்டமிட்டு நாடாளுமன்ற முடக்கப்பட்டு உள்ளது.
 
இந்த விவகாரத்தில் விசாரணை தேவையற்றது. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் விசாரணை மேற்கொண்டால் ஜனநாயகத்துக்கு மரியாதை இல்லை. அரசியல் லாபத்திற்காக சிறிய விஷயத்திற்கெல்லாம் நீதி விசாரணை ஆரம்பித்தோம் என்றால், நீதி விசாரணைக்கு அளவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும்.
 
புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தி வைக்கக் கூட நேரம் தராமல் அவையை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளன. இது என்னமாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கலாம் எதிரிக்கட்சியாக ஏன் இருக்க வேண்டும் என்று தான் புரியவில்லை என்ற அண்ணாமைலை,
 
தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான். திமுக எழுப்பும் அனைத்து விஷயங்களும் பாஜகவை எதிர்த்துத்தான். அரசியல் நாங்கள் தான் அவர்களுக்கு எதிரி. எங்களுக்கு திமுக தான் எதிரி. எங்களுக்குள்தான் யுத்தம் நடக்கிறது. இருமுனை போட்டியாகப் போய்க்கொண்டிருக்கிறது எங்கள் யுத்தம் என்று கூறினார்.