நாளை முதல் திறக்கப்படும் திரையரங்குகள்... முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

தமிழகம் முழுவதும் நாளை முதல் கூடுதல் தளர்வுகளாக திரையரங்குகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளை முதல் திறக்கப்படும் திரையரங்குகள்... முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிமனித இடைவெளியை கடைபிடித்து பார்வையாளர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கும் பணிகள், திரையரங்குகளை சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளும், திரைப்படங்களை ஒளிப்பரப்பியும் சோதனை செய்கின்றனர். மேலும், புதிய படங்கள் ஏதும் வராததால் வரும் வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், சேலம் மாவட்டத்திலும் திரையரங்குகளை திறப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகளை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கி இருப்பதால், அதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகாததால் எந்த திரைப்படத்தை திரையிடலாம் என்ற குழப்பத்தில் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 13 திரையரங்குகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி, இருக்கைகள் ஒதுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளிலும் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அமர வைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பார்வையாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கபட்ட பின்னரே திரையரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திரையரங்கு ஊழியர்கள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளிலும் முன்னேற்பாடு பணிகளை ஊழியர்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 50 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்களை அமர வைப்பது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிகள் நடைபெற்றன.