தடுப்பூசி இல்லைங்க.... போய்ட்டு நாளைக்கு வாங்க, அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

தடுப்பூசி இல்லைங்க.... போய்ட்டு நாளைக்கு வாங்க,  அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னையில்  பல இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவலில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், போதுமான தடுப்பூசி இல்லாத காரணத்தால், சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கு மொத்தமாக ஒரு கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வந்திருக்கும் நிலையில் 97 லட்சம் தடுப்பூசிகள் தற்போது வரையிலும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் கையிருப்பில் போதுமான தடுப்பூசி இல்லை. மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே இனி வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்த முடியும்  என்ற நிலை உருவாகியுள்ளது.

இதன் விளைவால், சென்னையில் இன்று பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டுமே தற்போது குறைந்த அளவிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடம் திரும்பி செல்கின்றனர்