பாஜகவின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம்..! சோதனையின் நோக்கம் இது தான்..!

பாஜகவின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம்..! சோதனையின் நோக்கம் இது தான்..!
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்களின் தமிழ்நாடு முழுவதும் இன்று தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 
 
திடீர் சோதனை:
 
தமிழ்நாடு மற்றும் கேரளா என 60க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளுக்கு தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 .30  முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகம், அதே போல மதுரை, தேனி, திண்டுக்கல், ராம நாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

 
வீரர்கள் குவிப்பு:
 
இந்த சோதனையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்து சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பிற்காக சி.ஆர்.பி.எப் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
எதிர்ப்பு:
 
இந்நிலையில் இந்த சோதனையை எதிர்த்து பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மாநில தலைமையகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல தலைவர் பக்கீர் முகமது,

பாஜக, ஆர்.எஸ்.எஸ்:
 
500 சதுர அடி அலுவலகத்தை  5 மணி நேரமாக 13 அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா  ஒரு ஜனநாயக அமைப்பு. இந்திய அளவில் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் குறிப்பாக பாஜக ,ஆர் எஸ் எஸ் அமைப்புகள் செய்யும் மக்கள் விரோத செயல்பாடுகளை உடனுக்குடன் மக்களுடைய மன்றத்திலே நாங்கள் எடுத்துரைக்கிறோம். இதனால் பாப்புலர் ஃப்ரன்டை தொடர்ந்து குறி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
 
மாட்டை வைத்து, மதத்தை வைத்து அரசியல்:
 
மேலும், மாட்டை வைத்து, மதத்தை வைத்து மட்டும்தான் அரசியல் செய்கின்றார்கள். மக்களின் பொருளாதார வளர்ச்சி,கல்வி குறித்து எந்த அக்கறையையும் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இஸ்லாமிய அமைப்பு  என்பதை தாண்டி ஒட்டுமொத்த இந்திய அமைப்பாக உருமாறி இருக்கிறது. இது ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு கண்ணை உறுத்துகிறது என குற்றம்சாட்டியவர், நான்கு மாதங்களுக்கு முன்பாக தான் இங்கு சோதனை நடத்தினர் அப்பொழுதும் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை . மீண்டும்  எங்கள் அலுவலகங்களில் சோதனையிடுகிறார்கள். இந்த சோதனைகளில் நிச்சயம் அவர்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என தெரிவித்தார்.

 
5 மணி நேர சோதனை:
 
தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அதிகாலை 3.30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. தேவையற்ற பதற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள். இது போன்ற மிரட்டல்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்றும் அடிபணியாது சட்டரீதியாக நாங்கள் இதனை எதிர்கொள்வோம் என பக்கீர் முகமது கூறியுள்ளார்