திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்...

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்...

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் அவலம் அரங்கேறியுள்ளது. 

கொரோனா தொற்றின் வேகம் திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கடந்த சில தினங்களாக தொற்றின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை  நெருங்கி கொண்டிருக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள்  அனைத்தும் நிரம்பியுள்ளது. 

மேலும் புதியதாக சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகளுக்கு படுக்கைகளின் தேவை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் போதியளவு செவிலியர்கள் மருத்துவர்கள் இல்லாததால் 252 படுக்கைகள் காலியாக உள்ளன.

இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிய நிலையில் புதிதாக வரும் நோயாளிகள்  ஒரு படுக்கையில் இரண்டு பேர் வீதம் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்  அவலம் அரங்கேறியுள்ளது. மேலும் இவர்களுடன் அவர்களது உறவினர்களும் அருகில் இருப்பது வேதனையின் உச்சமாகும்..

மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே இந்த அவலத்திற்கு  காரணம்  என்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பணியாளர்களை நியமித்து கொரோனா சிகிச்சைகளை முடுக்கி விட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.