இன்று எந்த மாவட்டங்களுக்கு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

திருச்சி , அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
ஸ்டெம் ஆன் வீல்ஸ்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார். அதன்படி இன்று காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 'ஸ்டெம் ஆன் வீல்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல்:
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் எறையூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோத்தாரி சர்க்கரை ஆலையில் புதிய அலகினை தொடங்கி வைத்து சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அரியலூர் மாவட்டம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிடுகிறார்.
சென்னை திரும்புதல்:
பின்னர் நாளை காலை அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்தில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு பல கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அதன் பின்னர் அரியலூரில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்று மதியம் 12.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை திரும்ப உள்ளார்.