100 கி.மீ பயணித்து குலதெய்வ வழிபாடு...பாரம்பரிய முறையில் மாட்டு வண்டியில் பயணம்!

100 கி.மீ பயணித்து குலதெய்வ வழிபாடு...பாரம்பரிய முறையில் மாட்டு வண்டியில் பயணம்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் 100 கிலோ மீட்டர் பயணித்து,  சிவகாசியில் உள்ள குலதெய்வங்களை வழிபாடு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பு கிராமத்தை தலைமையாகக் கொண்ட 56 கிராமங்களைச் சேர்ந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள குலதெய்வங்களை தொன்று தொட்டு மாட்டு வண்டிகளில் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். 

அதன்படி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குலதெய்வங்களை வழிபாடு செய்ய முடிவெடுத்த மக்கள் கடந்த 16 ஆம் தேதி நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள், மினி வேன்கள் மற்றும் டிராக்டர்கள் என 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டனர். இவர்கள் வழியில் ஆங்காங்கே தங்கி சமைத்து சாப்பிட்டு  ஓய்வெடுத்தவாறு 20 ஆம் தேதி சிவகாசியை சென்றடைந்தனர்.

இதையும் படிக்க : ட்விட்டருக்கு சவாலாக வருகிறது இன்ஸ்டா...! பயனாளர்களின் அதிருப்தி தான் காரணமா...?

இதனைத் தொடர்ந்து சிவகாசி அருகேயுள்ள சோரம்பட்டி அர்ஜூனா ஆற்றுப் பாலத்தில் பூஜைகள் நடத்தினர். பின்னர் மூன்று குழுக்களாகப் பிரிந்து எம். புதுப்பட்டி, மல்லி மற்றும் கீழராஜகுலராமன் கிராமங்களில் உள்ள தங்களது குலதெய்வ கோவில்களுக்கு சென்று குல தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். 

தொடர்ந்து, பிரிந்து சென்ற அனைவரும் 27 ஆம் தேதி எம். புதுப்பட்டி கூடமுடையார் அய்யனார் கோவிலில் ஒன்று கூடி கிடா வெட்டி அசைவ உணவை படையலிட்டு, குல தெய்வ வழிபாட்டை முடிக்கவுள்ளனர்.