பழங்கால உலோக சிலையை விற்க முயற்சி...! வாடிக்கையாளர் போல் சென்று பிடித்த அதிகாரிகள்...!

பழங்கால உலோக சிலையை விற்க முயற்சி...! வாடிக்கையாளர் போல் சென்று பிடித்த அதிகாரிகள்...!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் பழமையான இரண்டு ஸ்ரீதேவி சிலை, ஒரு கருப்பசாமி உலோக சிலை என மொத்தம் 3 சிலைகளை ஒவ்வொன்றையும் 60 லட்சம் ரூபாய் வீதம் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக வாடிக்கையாளர்களை தேடி வருவது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை வாங்குபவர்கள் போல் வேடமிட்டு வீரபத்திரன் இல்லத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு தனி அறையில் இந்த மூன்று சிலைகளை  பதுக்கி வைத்திருந்ததால் கையும் களவுமாக வீரபத்திரனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்தனர்.  

பின்னர் சிலைகளுக்குண்டான ஆவணங்களை கேட்டப்போது, வீரபத்திரன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் உடனடியாக அவரை கைது செய்து, அவரிடம் இருந்த மூன்று சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த மூன்று பழங்கால சிலைகளையும் போஸ் என்பவர் வீரபத்திரனிடம் கொடுத்து விற்பனை செய்து கொடுக்குமாறு தெரிவித்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.  

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை, விற்பனை செய்து கொடுத்த ஆட்டிறைச்சி கடையில் பணிபுரியும் போஸ் என்பவரை மதுரையில் வைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது, சிலை கடத்தலில்  யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் இந்த சிலைகள் தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை அதிகாரியிடம் இந்த சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி...! வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட் என்ன...?