தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் மோடி காட்டிய ஆர்வமும், அக்கறையும் மெய்சிலிர்க்க வைத்தது... வானதி புகழாரம்

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும்  மோடி காட்டிய ஆர்வமும், அக்கறையும்  மெய்சிலிர்க்க வைத்தது... வானதி புகழாரம்
தேசியக்கட்சியாக இருக்கும் பாஜக 1996ல் ஒரு எம்.எல்.ஏ., 2001ல் நான்கு எம்.எல்.ஏ.,  தமிழக சட்டப்பேரவையில் இடம் பெற்றது. அதன்பிறகு 2006, 2011,2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாத நிலையில், தமிழகத்தில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என்ற லட்சியத்தோடு கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சட்டசப்பேரவைக்குள் பிரவேசித்தனர் பாஜக எம்.எல்.ஏ.க்கள். இந்நிலையில்  தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் நேற்று பிரதமரை சந்தித்தனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் உடன் சென்றார். 
பிரதமர் மோடி தமிழக பாஜக எம்.எல்.ஏ.க்களிடம் என்ன பேசினார் என்பது உள்ளிட்ட சில தகவல்களை கோவை தெற்கு எம்.எல்.ஏ.வும், தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

 
“தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற 4  பேரும் அவரது இல்லத்தில் சந்தித்தோம். மாநிலத் தலைவர் எல்.முருகனும் இந்தச் சந்திப்பில் உடனிருந்தார்.  தமிழகத்தின் நலன், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, தமிழக அரசியல் சூழல் குறித்து விரிவாக எங்களுடன் கலந்துரையாடினார். தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு எவ்வாறு மக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பல கேள்விகளை எழுப்பினார். அவரது அக்கறையும், ஆர்வமும் எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. பிரதமர் உடனான 35 நிமிட சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக, மகிழ்ச்சிகரமாக நேர்மறை சக்தியை அளிக்கும் ஒன்றாக அமைந்தது. தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் பிரதமர் மோடி காட்டிய ஆர்வமும், அக்கறையும் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது”என்று குறிப்பிட்டுள்ளார் வானதி சீனிவாசன்