பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள்., நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடிதம்.,! 

பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள்., நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடிதம்.,! 

தமிழ்நாடு முதல் அமைச்சர் தலையிலான பட்டியலின மற்றும் பழங்குடியினர் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தை ஜூலையில் நடத்திட வலியுறுத்தி முதல் அமைச்சருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடிதம் எழுதியுள்ளது.


அந்த கடிதத்தில் "பட்டியலின மக்கள் மீது தொடர்ச்சியாக வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது, அதிகரித்தும் வருகிறது.உதாரணமாக மார்ச் 2020 முதல் ஜூன் 2020 வரையான நான்கு மாத (ஊரடங்கு காலம்) காலத்தில் மட்டும் 17 கொலைகள் ,4 மலக்குழி மரணங்கள் ,5  பாலியல் வல்லுறவு சம்பவங்கள், 3 சாதிஆணவப்படுகொலைகள், 5 முறை சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் மீதான தாக்குதல்கள்,7 முறை தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு அவமரியாதை , 2 முறை அம்பேத்கர் சிலைக்கு அவமதிப்பு , 1 முறை கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு , 2 மயானம் மயானப் பாதை பிரச்சினை , 3 அரசுப் பணியாளர்களால் பாரபட்சம் ,  50 தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

அதோடு பட்டியலின மக்கள்  மீது வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அவற்றுள் 2021ல் சட்ட மன்றத் தேர்தல் முடிந்தவுடன் சில,
,
1) அரக்கோணம் சோகனூரில் இரண்டு பட்டியலின இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2) மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் செங்கல் சூளை ஒன்றில் மர்மமான முறையில் சீனிவாசன் என்கிற பட்டியலினத்தவர் கொலை செய்யப்பட்டார்.
3) சேலம் மாவட்டம் செந்தில் என்கிற தலித், கவுதம் என்கிற சாதி இந்துவால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்
4) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் பட்டியலின தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த முத்து மனோ என்கிற கைதி சிறைக்குள்ளேயே அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
5) திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், கல்லரைப்பாடி தனி ஊராட்சித் தலைவர் திரு. ஏழுமலையை செயல்படவிடாமல் தடைசெய்கிறார்கள்.  
6) விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், ஒட்டநந்தல் கிராமத்தில் பட்டியலின முதியவர்களைக் காலில் விழ வைத்து அவமானப்படுத்தியது.
7) விழுப்புரம் மாவட்டம், விக்கரவாண்டி வட்டம், சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரத்தூர் கிராம பட்டியலின மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுத்துள்ளனர். 
8) சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், தபசுகுடி மயானத்தில் தலித்துகள் புதைக்கும் பகுதியில் ஊராட்சியால் அமைக்கப்பட்ட சுற்று வேலியை அகற்றியது.

தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிற பின்னணியில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

1-பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) திருத்தச் சட்டம் 2015 விதி 16ன் படி மாநில முதல்வர் தலைமையிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் கூட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு தடவை ஜனவரி மாதமும் ஜூலை மாதமும் கூட்ட வேண்டும். அதன்படி 2021 ஜூலை மாதம் இக்கூட்டத்தை தமிழக முதல்வர் அவர்கள் கூட்ட வேண்டும். 

2-இந்திய அரசியல் சாசன சட்டக் கூறு 338ன் படி தமிழகத்தில் மாநில அளவிலான பட்டியல் சாதியினருக்கான ஆணையம் ஒன்றை அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

3-ஆந்திராவில் உள்ளது போல் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்ட அமலாக்கத்துக்கு என மாநில சட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும்

4-வன்கொடுமை தடுப்பு சட்ட விதி 8ன் படி ஒவ்வொரு மாதமும் 20 ம் தேதி அன்றோ அதற்கு முன்னரோ தனது அறிக்கையை மாநில முதல்வருக்கு அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் டிஜிபியை பணிக்கவேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக்கொள்கிறது" என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.