முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நம்பிக்கை நட்சத்திரம் இளைஞர்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம் என்ன? 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நம்பிக்கை நட்சத்திரம் இளைஞர்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம் என்ன? 

ஈரோடு மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார் ஒரு ஆசாமி.. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நம்பிக்கை நட்சத்திரம் இளைஞர்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம் என்ன? விரிவாக பார்க்கலாம்..

அ.தி.மு.க.வின் முன்னாள் ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. இவரிடம் கோவையைச் சேர்ந்த சுதாகர் என்பவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். 

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்  இந்த சுதாகர் தமிழ்நாட்டில் வேலை தேடி அலையும் இளைஞர்கள், இளம்பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியதாக தெரிகிறது. பத்திர எழுத்தர் வேலைக்கு 8 லட்சம், பேரூராட்சி செயல் அலுவலர் வேலைக்கு 20 லட்சம் என லட்சக்கணக்கில் பேரம் பேசியுள்ளார் சுதாகர். 

பணம் வாங்கிய பின்னர் வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள் அனைவரையும் சென்னை தலைமை செயலகம் வரவழைத்து விரைவில் பணியில் சேர்ந்து கொள்ளுமாறும் உறுதியளிப்பு ஆணையை வழங்கியிருக்கிறார். சுதாகர் அளித்த பரிந்துரைக் கோப்புகளில் அரசு அலுவலக முத்திரை இருப்பதைப் பார்த்த பட்டதாரிகள் அதனை உண்மையென நம்பி லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். 

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பணி நியமன ஆணை வழங்கப்படும் என தெரிவித்த நிலையில்  ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் தவமணி என்பவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று சுதாகர் வழங்கிய பரிந்துரை கடிதத்தை காண்பித்தார். 

அப்போது அங்குள்ள அதிகாரிகள் விசாரித்து விட்டு இது போலியான கடிதம் என கூறியவுடன் அதிர்ச்சியடைந்தார் தவமணி. இதையடுத்து தவமணி தன்னுடன் சேர்ந்து விண்ணப்பம் போட்ட அனைவரிடத்திலும் விசாரித்தபோது அனைவருமே ஏமாற்றப்பட்ட விவரம் தெரியவந்தது. 

தங்கள் அனைவருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாய் உறுதியளித்த சுதாகரிடம் சென்று கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும் சுமார் ஒன்றரை வருடமாகியும் பணம் தராமல் இழுத்தடிக்கப்பட்டதால் பட்டதாரிகள் ஆவேசமடைந்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயரை சொல்லி தங்களை ஏமாற்றிய சுதாகரிடம் இதுகுறித்துக் கேட்டறிந்தபோது அவரது பேச்சில் சில முரண்பாடுகள் காணப்பட்டது. 

இதையடுத்து ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் பட்டதாரிகள் ஒன்று சேர்ந்து ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளரிடம் சென்று எஸ்.பி.வேலுமணியின் கார் டிரைவர் சுதாகர் மீது புகார் அளித்துள்ளனர். அரசு வேலையில் சேர வேண்டும் என்பது இளைஞர்களின் கனவாகவே உள்ள நிலையில் இதனை பல ஏமாற்றுப் பேர்வழிகள் பயன்படுத்திக் கொண்டு லாபம் பார்த்தே வருகின்றனர். 

இதையும் படிக்க:    ”100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா...”அமைச்சர் செந்தில் பாலாஜி!!!