தமிழகத்தில் கோயில்கள் எப்போது திறக்கப்படும்....? மதுரையில் அறநிலையத்துறை அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் கோயில்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார்.

தமிழகத்தில் கோயில்கள் எப்போது திறக்கப்படும்....? மதுரையில் அறநிலையத்துறை அமைச்சர் பேட்டி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு கடந்த சில தினங்களாக கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ள நிலையில் யானைக்கு அளிக்கப்பட்டு வரும் கண் சிகிச்சை குறித்தும், தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளையும் இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது   வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனிஷ் சேகர் ஆகியோரும் உடன் இருந்தனர். 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு : மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு கடந்த ஆண்டே கண்ணில் குறைபாடு இருந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மருத்துவர் வருகை தாமதம் ஆனதால், யானைக்கான சிகிச்சை தாமதம் ஆகியுள்ளது. கடந்த ஆட்சியிலே தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யானைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை மீண்டும் தேனியில் இருந்து மதுரைக்கு பணி மாறுதல் செய்ய உள்ளோம். யானைக்கு சிகிச்சை அளிக்க வெளி நாடுகளில் இருந்து கூட மருத்துவர்களை அழைத்து வர இருக்கிறோம்.
 
தீ விபத்து நடைபெற்ற வீர வசந்தரயார் மண்டபம் விரைவில் புனரமைக்கப்படும்.  அடுத்தாண்டு மீனாட்சி கோயில் கும்பாபிஷேக பணிகள் நடப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 
 
மேலும் அவர், கோயில் சொத்துக்களை அபகரித்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதில் திமுக பிரமுகர்கள் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
கோயில்கள் திறப்பது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், கொரோனா நோயில் ஒரு உயிர் கூட பரிபோகாது என்ற நிலை வரும் போது கோயில்கள் திறக்கப்படும் என்றார்.
 
கோவிலில் உள்ள தங்க ஆபரணம்  உள்ளிட்ட ஆவணங்கள் குறித்து இணையதளத்திகள் வெளியிட்டால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்பதால் வெளிப்படை தன்மையுடன் இணையத்தில் வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.