சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை... 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை பொழிந்து வருகிறது. 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை... 

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, அரும்பாக்கம், பாடி, அண்ணா சாலை, எழும்பூர், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, பாரிமுனை, சைதாபேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. 

இதேபோல் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இரவு முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சாலை வோரங்களில் கடைகளை அமைத்து விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் மழை காரணமாக கடைகளை அமைக்க முடியாமல் அவதியடைந்துள்ளது. 

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் திருவாரூரில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குத்தாலம் , தரங்கம்பாடி , சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது.தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.