ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?

தமிழகம் முழுவதும் அக்டோபர் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அக்டோபர் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.  நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்பினருக்கும்  பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்து 200-க்கும் கீழ் குறைந்துள்ளதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்தும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி பொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும், பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காத வகையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும்..