பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தில் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு, வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி மீரா மீதுனுக்கும் சம்மன் அனுப்பிய நிலையில், மீரா மிதுன் தலைமறைவானார்.
பின்னர் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதற்கிடையில் இருவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
அந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோரை டிசம்பர் 17-ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்