இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்யும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
அதன்படி வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம்-6டீ-ஐ பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுடன் சத்யபிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.