வி.பி.சிங்கின் உருவச்சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்...!
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் உருவச்சிலையை, சென்னை மாநிலக்கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளாா்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சட்டக் கல்லூரியில் படித்த காலத்திலேயே காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, சர்வோதய சமாஜத்தில் இணைந்து, பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களை தானமாக வழங்கியவர். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த அவா், 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச முதலமைச்சராகவும், பின்னர் 1989-ம் ஆண்டு பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வி.பி.சிங்கின் ஆட்சிக் காலத்தில்தான் காவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இதை கௌரவிக்கும் வகையில் அவருக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் திறப்பு விழா இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிலையை திறந்து வைக்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவரது சாதனைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கி பேசவுள்ளார். நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சா் அகிலேஷ் யாதவ், அமைச்சர்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.