ஸ்கேன் எடுக்க சென்ற குழந்தை...உயிரிழந்து வந்த அவலம்...மருத்துவர்கள் அலட்சியம் தான் காரணமா?

ஸ்கேன் எடுக்க சென்ற குழந்தை...உயிரிழந்து வந்த அவலம்...மருத்துவர்கள் அலட்சியம் தான் காரணமா?
Published on
Updated on
1 min read

சென்னை எழும்பூரில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கால், தங்களது மூன்றரை வயது குழந்தை உயிரிழந்து விட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். 

ஸ்கேன் எடுக்க ஒத்துழைக்காத குழந்தை:

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஜஸ்வந்த் என்ற ஆண் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். தாடை குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை, எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ஒத்துழைக்காததால் நேற்று மயக்க மருந்து கொடுத்து ஸ்கேன் எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாததால் அச்சம் அடைந்த பெற்றோர் மருத்துவரிடம் முறையிட்டுள்ளனர். தொடர்ந்து, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

குழந்தை உயிரிழப்பு:

ஆனால், குழந்தையின் உடலில் எந்தவித அசைவும் இல்லாததால் பதற்றம் அடைந்த பெற்றோர் மீண்டும் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, குழந்தையை வெண்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதையடுத்து, சில மணிநேரங்களில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்ததால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதைத்தொடர்ந்து மதியம் வரை நன்றாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எப்படி இறந்துபோகும் என்று பெற்றோர் கேள்வி எழுப்பியதற்கு மருத்துவர்கள் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் சென்றுள்ளனர். 

மருத்துவர்கள் அலட்சியம் தான் காரணம்:

இந்நிலையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் தான் குழந்தை உயிரிழந்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் மருத்துவமனையில் சரியான பாதுகாப்பு இல்லை என்றும்,  இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று மருத்துவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com