புதுச்சேரியில் திமுக கவுன்சிலர் கைது!

புதுச்சேரியில் திமுக கவுன்சிலர் கைது!

மணல் கடத்தலில் ஈடுப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திமுக கவுன்சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மணல் குவிப்பு

புதுச்சேரி சோரப்பட்டு பகுதியில் ஒய்வு பெற்ற இராணுவ வீரரின் வீடு கட்டுவதற்காக சாலையில்  போக்குவரத்து இடையூறாக அதிக அளவில் மணல் கொட்டப்பட்டுள்ளதாக  புதுச்சேரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்றுள்ளது. இது குறித்து திருக்கனூர் போலீசார்க்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் துணை சார்பு ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் மணல் கொட்டப்பட்டிருந்த இடத்திற்கு சென்று, மணலை அப்புறப்படுத்த கோரியும் மணல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

திமுக கவுன்சிலர் கைது

சோரப்பட்டு அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி பெரியபாபு சமுத்திரத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் சரவணன் என்பவர் தனது லாரியில் மணல் எடுத்து வந்து கொட்டியது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் எங்கிருந்து மணல் எடுத்து வருகிறார் என போலீசார் தொடர் விசாரணை நடத்தினர்.

செய்ததில் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் சங்கரபரனி ஆற்றில் இருந்து லாரி மூலமாக தொடர்ச்சியாக அவர் மணல் கடத்தலில் ஈடுப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் மீது  போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட திமுக கவுன்சிலரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புதுச்சேரி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.