நீட் தேர்வு மாணவர்களை பாதிக்கிறதா? இல்லையா? நாளை முக்கிய ஆலோசனை
நீட் தேர்வின் தாக்கம் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் 3வது ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.
நீட் தேர்வு சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்பட்டுத்தியுள்ளதா என ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. சமூக சமத்துவத்துகான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், கல்வியாளர் ஜவஹர் நேசன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சட்டத்துறை செயலர் கோபி ரவிகுமார், பள்ளிக்கல்வித்துறை செயலர் காக்கல்லா உஷா, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனர் வசந்தாமணி ஆகியோர் இக்குழுவில் உள்ளனர்.
இந்த குழு கடந்த சில ஆண்டுகளில் சமூகத்தின் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை நீட் தேர்வு பாதித்துள்ளதா, பாதித்திருந்தால் நீட் தேர்வுக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறும் வகையிலான சேர்க்கை முறைக்கான வழிமுறைகள் குறித்து விரிவாக இந்த குழு ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும், நீட் தேர்வு குறித்த கருத்துக்களை 23ம் தேதிக்குள் தெரிவிக்கவும் இக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த 23 ஆம் தேதி வரை 85,935 தரப்புகள் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வந்து இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை இந்தக் குழு ஆலோசனை நடத்தி இருந்த நிலையில், நாளை 3வது முறையாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.