அதிமுக ஜாதி கட்சியாக மாறிவிட்டது: முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த பி.ஆர்.சுந்தரம் கடும் தாக்கு...

அதிமுக முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதிமுக ஜாதி கட்சியாக மாறிவிட்டது: முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த பி.ஆர்.சுந்தரம் கடும் தாக்கு...

1996 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிரான அலை வீசியது. இதனால் ஜெயலலிதாவும் பர்கூர் தொகுதியில் தோற்றுப் போனார். அந்த தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 4 பேர் மட்டுமே வென்றனர். அந்த 4 பேரில் ஒருவர் பி.ஆர். சுந்தரம்.

1997-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை நாமக்கல் அதிமுக மாவட்ட செயலாளராக பணியாற்றினார். 2014 லோக்சபா தேர்தலில் வென்று எம்.பி.யானார். ஜெயலலிதா மறைந்த தர்மயுத்தம் நடத்திய ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்தார் பி.ஆர். சுந்தரம்.நாமக்கல் அதிமுக மாவட்ட அவைத் தலைவராக பதவியில் இருந்து வந்தார்.அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பார்த்தார். ஆனால் இவருக்கு சீட் வழங்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்தார். 

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாமக்கல் முன்னாள் எம்.பியும், ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம், தம்மை திமுகவில் இணைத்து கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக ஒரு ஜாதி கட்சியாக மாறி விட்டதாக விமர்சித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி போல செயல்படுவதாகவும், ஓ.பன்னீர்செல்வம் பதவி கிடைத்தால் போதும் என ரப்பர் ஸ்டாம்ப் ஆகி விட்டதாகவும் கடுமையாக சாடினார்.