திமுகவில் இணைவதை உறுதிப்படுத்திய மகேந்திரன்.! கலைஞர் பிறந்தநாளில் உற்சாக ட்வீட்.! 

திமுகவில் இணைவதை உறுதிப்படுத்திய மகேந்திரன்.! கலைஞர் பிறந்தநாளில் உற்சாக ட்வீட்.! 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். மக்கள் நீதி மய்யத்தில் கமலுக்கு பிறகு அதிக வாக்குகள் பெற்ற நபராகவும் இருந்தார்.

நிலைமை இப்படி இருக்க, தேர்தலுக்கு பிறகு திடிரென்று மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து அதற்கான கடிதத்தையும் கொடுத்தார். மேலும் கமல்ஹாசன் மீது விமர்சனங்களையும் வைத்தார். அவரின் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து நீக்கப்படவேண்டிய களை என கமல்ஹாசனும் மகேந்திரனை கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்த சம்பவத்துக்குப் பிறகு மஹேந்திரன் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் பரவின. இந்த தகவல்களை மகேந்திரன் மறுக்கவில்லை. மேலும் கொங்கு மண்டலத்தில் வலிமையான திமுக முகங்கள் இல்லாததால் மகேந்திரனை திமுகவின் கொங்கு முகமாக மாற்ற திமுகவும் விரும்பியதாக சொல்லப்பட்டது. 

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளான இன்று மகேந்திரன் கலைஞரை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிந்துள்ளார். அந்த பதிவில் "சுய மரியாதை இயக்கத்தையும், சமூக நீதியையும், திராவிட சித்தாந்தத்தையும் தம் சொல்லால், செயலால், எழுத்தால் உலகறியச் செய்தவர்; திருக்குவளை ஈன்றெடுத்த திராவிட சூரியன்,5 முறை தமிழகத்தை ஆண்ட, ஐயா திரு. கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறப்பு ஓர் சரித்திரம்! " என்று குறிப்பிட்டு அதை திமுக தலைவர் ஸ்டாலினின் ட்விட்டர் கணக்குக்கும் டாக் செய்துள்ளார். 

இதன் மூலம் தான் திமுகவில் இணைய விரும்புவதையும், திமுகவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதையும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணர்த்தியுள்ளார் மகேந்திரன்.