தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கிய மழை..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
அமைச்சர் நாசர் ஆய்வு:
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை, மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள தடுப்பு முன எச்சரிக்கை பணிகளை கொட்டும் மழையிலும் குடை பிடித்து கொண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு செய்தார். மேலும், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பணிகளில் நிலையை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சென்னை - கொல்கத்தா:
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கசாவடியில் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உடன்குடி, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை, தளவாய்புரம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலையில் மழை நீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சந்தைப்பேட்டை, அரியூர், மணலூர்பேட்டை, ரிஷிவந்தியம், ஆவியூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கனமழை.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதியான அரகண்டநல்லூர், மனம்பூண்டி, ஒதியத்தூர், நல்லா பாளையம், ஆலம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக கனமழை பெய்ததால் பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.