குளித்தலை அருகே எழுதியாம்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரின் பண்ணை வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூரை அடுத்த எழுதியாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்துக்கு சொந்தமான "சங்கர் ஃபார்ம்ஸ்" பண்ணை வீட்டில் வருமான வரி சோதனை தொடங்கியது. இரண்டு வாகனங்களில் வந்த ஆறு அதிகாரிளுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாந்தோப்புடன் கூடிய 4000 சதுரடி அளவு பங்களா வீடும், நீச்சல் குளமும் இருப்பதாகவும், முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தளிப்பதற்காக இந்த பண்ணை வீடு பயன்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்துக்கு சொந்தமான அலுவலக பூட்டை உடைத்துக் கொண்டு அதிகாரிகள் உள்ளே சென்று சோதனையிட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.
இதற்கு முன்பாக கடந்த ஆறு நாட்களாக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் பணிபுரியும் பிரேம்குமார் மற்றும் சோபனா ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.