தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்!

தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்!

கரூர் அடுத்த காந்திகிராமம் 15 ஆவது வார்டுக்கு உட்பட்ட தமிழ்நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் 96 நபர்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு வருடமாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நீண்ட நாட்களாக செப்டிக் டேங்க் கழிவு நீர் குடியிருப்புக்கு அருகிலேயே வெளியேறி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு  குழந்தைகள் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பலமுறை முறையிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டித்து குடியிருப்பு வாசிகள் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குப்பை தொட்டியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் அடிப்படையில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். அரை மணி நேரம் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.