வெகு விரைவில் திமுக ஆட்சி கலைந்து விடும் என பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் பேட்டியளித்துள்ளார்.
பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனை பற்றி தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட பாஜக சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வந்தால் எங்களுக்கு எதிரி திமுகதான் ஆட்சி கட்டிலில் மட்டும் அல்ல அரசியல் அரங்கத்தில் இருந்து திமுகவை விரட்டுவோம் என்றார்.
திமுகவை அழித்து ஒழிப்பதுதான் பாஜகவினுடைய முதல் வேலை எனக் கூறிய அவர், திமுக தனித்து நின்றால் பாஜகவும் தனித்து நிற்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். மேலும், வெகு விரைவில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைந்து விடும் எனவும் தற்போது ஒரு செந்தில் பாலாஜி தற்பொழுது வந்துள்ளதாகவும் விரைவில் நான்கு செந்தில் பாலாஜி ஆகின்ற பொழுது இந்த ஆட்சி கலைந்து விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எப்படி இருந்தாலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வந்தாலும் பரவாயில்லை என்று தான் நினைப்பதாகவும், அப்பொழுது குஜராத் மாடல் ஆட்சியை நீங்கள் பார்ப்பீர்கள் என்றும் பேசியுள்ளார்.
இதையும் படிக்க:குடியரசு தலைவருக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது!