கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது,..வெளிச்சத்துக்கு வந்த மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியரின் பாலியல் கொடூரம்,..புகார் அளித்தும் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம்.! 

கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது,..வெளிச்சத்துக்கு வந்த மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியரின் பாலியல் கொடூரம்,..புகார் அளித்தும் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம்.! 

சென்னை கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து பல பள்ளி மாணவிகள் தான் அனுபவித்த பாலியல் தொந்தரவு சம்பந்தமான விஷயங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். 

இதனால் சமூக வலைதளம் முழுவதும் பாலியல் தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக சேத்துபட்டில் இயங்கி வரக்கூடிய மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவிகள், ஆசிரியர் ஆனந்த் மீது கடந்த சில தினங்களாக பாலியல் புகார்களை கூறி வருகின்றனர். 

இந்த சம்பவம் சர்ச்சையாகியதால் ஆசிரியர் ஆனந்தை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக கீழ்பாக்கம் அனைத்து மகளிர் போலீசாரும் விசாரணை துவக்கியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த பள்ளி மாணவிகள் பல முறை ஆசிரியர் ஆனந்த் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது  குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், உயர்கல்வி துறை செயலர், பள்ளி நிர்வாகம் ஆகியவற்றிற்கு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். 

அதில், "ஆசிரியர் ஆனந்த் கடந்த 2005-2006ஆம் ஆண்டு தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றிய போது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில் அவரது விபரங்கள் குறித்து விசாரிக்காமல் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சேர்த்துள்ளனர். தந்தை எனக்கூறி பல மாணவிகளுக்கு வகுப்பறைகளில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து புகார் அளிக்க மாணவிகள் சென்றால் தேர்ச்சி பெறவிடாமல் செய்து விடுவதாக ஆசிரியர் ஆனந்த் மிரட்டி வந்தார்.

மாணவிகளின் செல்போன் எண்கள், வீட்டு முகவரி போன்றவற்றை ரகசியமாக திருடி மாணவிகளை மிரட்டி அதன் மூலம் ஆசிரியர் ஆனந்த் ஆபாச மெசேஜ் அனுப்பி வருவார். சிறப்பு வகுப்பு காலை 7 மணிக்கு இருப்பதாக குறிப்பிட்ட மாணவிக்கு மட்டும் மெசேஜ் அனுப்பி பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியர் ஆனந்த் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதோடு, இரவு நேரத்தில் கோச்சிங் வகுப்பு நடத்தும் போதும் பாலியல் தொந்தரவில் ஆசிரியர் ஆனந்த் ஈடுபட்டு வந்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது அதை பொய்ப் புகார் என நம்பவைத்தார். 

மாணவிகள் அனுமதியின்றி கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, மடியில் உட்கார வைப்பது போன்ற ஆபாச செயலை ஆசிரியர் ஆனந்த் செய்து வந்த போது 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்பதால் பல மாணவிகள் புகார் அளிக்காமல் இருந்து வந்தனர்" என அந்த புகாரில் கூறியுள்ளனர்.

மேலும், "ஆசிரியர் ஆனந்த் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு கோவில்களுக்கு செல்லலாம் என மூன்று மாணவிகளை தனது இருசக்கர் வாகனத்தில் அழைத்து கொண்டு செல்வது வழக்கம். இதற்கு மறுப்பு தெரிவித்தால் குறிப்பிட்ட மாணவி குறித்து கேவலமான கருத்துகளை சக மாணவிகளின் முன்பு தெரிவிப்பார். ஆசிரியர் ஆனந்த் பற்றி இதுவரை 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதாகவும், ஆசிரியர் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் மாணவிகள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினரும் விசாரணை தொடங்கி உள்ளனர். குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், உயர்கல்வி துறை செயலர், பள்ளி நிர்வாகம் ஆகியவற்றிற்கு புகாரை அனுப்பிய முன்னாள் மாணவிகளிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஆசிரியர் ஆனந்த் குறித்த தகவல்களை சேகரித்து நேரில் வரவழைத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.