மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து நெகிழ்ச்சி அடைந்தனர்.
அந்த பள்ளியில் 1980 முதல் 86-ம் வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சில மாணவர்கள் ஏற்பாடு செய்தனர். அதன்படி தற்போது வெளிநாடு, வெளி மாநிலங்கள், மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வந்த மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பள்ளிப் பருவத்தில் ஒன்றாகப் பயின்ற நண்பர்களை பார்த்ததும் ஆரத்தழுவி பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். பள்ளி செயலர் மற்றும் தங்களுக்கு கல்வி போதித்து தற்போது பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் தேடிப்பிடித்து பள்ளிக்கு அழைத்து வந்து குருவுக்கான மரியாதை செய்து மகிழ்ந்தனர். 15 லட்ச ரூபாய் மதிப்பில் ஆசிரியர்களுக்கான அறை கட்டித் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.