இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பல ஆண்டுகளாக கொடிக்கட்டி பறக்கிறது. அதிலும், அக்காலத்தில் கல்வி வசதிகள் அவ்வளவாக இல்லாத நிலையில், சரியான வேலை இல்லாமல் கிடைக்கும் சிறு சிறு வேலைகளையும் செய்து வந்தனர் ஒரு சிலர்.
அப்போது அரபு நாடுகளில், வீட்டு வேலை செய்தாலும், குப்பை அள்ளினாலும் மிகவும் அதிகமான சம்பளம் கிடைக்கும் என தெரியவந்ததில் இருந்து இந்தியாவில் இருந்து, குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து பலரும் பெட்டி படுக்கைகளுடன் ஓமன், கத்தார் போன்ற அரபு நாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஆனால், சரியான காரணம் இன்றி அங்கு செல்ல விசா கிடைக்காது என்பதால் பலர், போலி பாஸ்போர்ட்டுகளுடன் அங்கு சென்று பின் பல வகையான சிறு சிறு வேலைகளை செய்து அங்கு ஒய்வுக்கு நேரமில்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர் பல தென்னிந்தியர்கள். அதிலும், ஒரு சிலர் போலி அடையாளங்களுடன் செல்வதால், அவர்களைப் பற்றிஅய் தகவல்கள் அவர்களது குடும்பங்களுக்கு கொடுக்க முடியாத அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று சுதா ஜாஸ்மீன் என்ற பெண்ணை ஓமன் நாட்டில் இருந்து மீட்டு சென்னை வரவழைத்த நிலையில், இது போன்ற பலரும் கஷ்டப்பட்டு வருபவர்களை தாய்நாட்டிற்கு மீட்டுக் கொண்டு வர தமிழ்நாடு அரசு அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள புதிதாக ஒரு செயலி உருவாக்க இருப்பதாக எம்.பி கலாநிதி வீராசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து கொடுமை அனுபவிக்கும் தமிழர்களை மீட்க உதவி செய்ய முதலமைச்சர் திமுக அயலக அணி உருவாக்கினார். தமிழர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் உதவிட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு உள்ள தமிழர்கள் யார் எந்த நாட்டில் உள்ளனர் என்ற பட்டியல் இல்லை. இதற்காக ஒரு செயலி உருவாக்கி வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். செயலி முலம் விவரங்களை சேகரிக்கப்படும். இந்த திட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.” என தெரிவித்தார்.
இப்படியாவது வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு இந்தியாவிற்கு வரவழைக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிக்கு பல தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.