கொரோனா காலத்தில் பணியாற்றிய எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மா.சுப்பிரமணியன் பேட்டி:
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டிற்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் 1200 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியனிடம், கொரோனா கால செவிலியர்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
100% பணி பாதுகாப்பு :
அதற்கு பதிலளித்த அவர், செவிலியர்களை ஒரு சிலர் தவறாக வழி நடத்துவதாக குற்றம் சாட்டினார். கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்ஆர்பி செவிலியர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், 100% அவர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது இருக்கிறது எனவும், தற்பொழுது அவர்களுக்கு துறை ரீதியான மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக 3949 காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக இன்று மாலை அரசாணை வெளியிட இருப்பதாக கூறிய அவர், 3949 செவிலியர்களும் பணியாற்றுவதற்கு தமிழகத்தில் உள்ள 38 ஆட்சித் தலைவர்கள் தலைமையில் மாவட்ட சுகாதார சங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
எனவே, நாளையிலிருந்து செவிலியர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெறும். அதில் 3949 இடங்களில் தற்போது எம் ஆர்.பி. செவிலியர்கள் 1800 பேருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு இந்த நேர்காணலில் 40 சதவீதம் மதிப்பெண் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் 100 சதவீதம் அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
அதேபோல், ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்றும், எம் ஆர் பி செவிலியர்களுக்கு 14000 லிருந்து 18000 ஆக சம்பளம் உயர்த்தி, அந்தந்த மாவட்டத்திலேயே பணி அமர்தத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.