சசிகலா வீட்டுக்கு பக்கத்து தெருவில் வீடு வாங்கிய ஓபிஎஸ்... வெறும் 1 கிலோமீட்டர் தான்!!

சசிகலா வீட்டுக்கு பக்கத்து தெருவில் வீடு வாங்கிய ஓபிஎஸ்... வெறும் 1 கிலோமீட்டர் தான்!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதன் காரணமாக 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அதிமுக எதிர்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டது. இந்த தோல்வியின் காரணமாக இத்தனை ஆண்டுகள் அரசு இல்லத்தில் தங்கியிருந்த அதிமுக அமைச்சர்கள் தாங்கள் அதுவரை வசித்துவந்த அரசு இல்லத்தை காலிசெய்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வுசெய்யப்பட்டதால் அவர் வசித்துவந்த கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள செவ்வந்தி இல்லத்தில் தொடர்ந்து தங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வசித்து வந்த தென்பெண்ணை இல்லத்தை காலிசெய்ய அறிவுறுத்தப்பட்டது. 

அதைத் தொடர்ந்து நல்ல நாளான நேற்றைய தினத்தில் அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு சென்னை தி. நகர் கிருஷ்ணாசாலையில் நடிகர் சிவாஜி இல்லம் அருகே உள்ள வீட்டில் குடியேறியுள்ளார் பன்னீர் செல்வம். இதுவரை பன்னீர் செல்வம் வசித்துவந்த அரசு இல்லம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் பன்னீர் செல்வம் வீடு மாறியதில் அரசியல் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது தற்போது பன்னீர் செல்வம் குடியேறியுள்ள புதிய வீட்டுக்கும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா தற்போது இருக்கும் வீட்டுக்கும் இடையே வெறும் ஒரு கிலோமீட்டர் தான் தூரம் இருக்கிறது. ஏற்கனவே பன்னீர் செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.