அடுத்தடுத்து நீதிமன்றத்தை நாடும் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்!

அடுத்தடுத்து நீதிமன்றத்தை நாடும் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்!

அதிமுகவில் யார் தலைமை என்ற சிக்கல் நீடித்து வரும் நிலையில் கடந்த ஜுன் 27 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் ஜூலை 11 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராகவும், ஜூன் 23 அன்று நடந்த பொதுக்குழு கூட்ட விவரங்களையும், ஜூன் 27 அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டம் விதி மீறி கூட்டப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்புக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிச்சாமித் தரப்பும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் விதியை மீறி கூட்டப்படவில்லை எனவும் ஓ. பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இன்று அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்குத் தொடர ஓ.பி.எஸ் தரப்புக்கு அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, இபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக 4 வாரங்களில் மனுதாரர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஒற்றைத்தலைமை தேர்தலை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி நீதிமன்றத்தை நாடுவதால் சட்டரீதியாக அதிமுக முடக்கப்படுமோ என்ற அச்சம் அத்தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

- ஜோஸ்