மாநகராட்சி ஊழியரிடம் போலீசார் தகாத முறையில் பேசக்கூடாது! காவல் ஆணையர் அறிவுரை

கொரோனா பரிசோதனை செய்ய வரும் மாநகராட்சி ஊழியரிடம் தகாத முறையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என அனைத்து காவலர்களுக்கும் காவல் ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார்.

மாநகராட்சி ஊழியரிடம் போலீசார் தகாத முறையில் பேசக்கூடாது! காவல் ஆணையர் அறிவுரை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக தொற்று பரவாமல் தடுக்க காவல்துறை மற்றும் மாநகராட்சி துறை இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேராக சென்று அருகே உள்ள நபர்களுக்கு மாநகராட்சியினர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அதே போல் காவலர் குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மாநகராட்சி ஊழியர்கள் அருகே வசிக்கும் ஓய்வு பெற்ற காவலரை பரிசோதனை செய்ய முயன்ற போது மாநகராட்சி ஊழியரை தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் நேராக சென்று பரிசோதனை செய்வதாகவும், உயிரை காப்பதற்காகவே பரிசோதனை செய்வதாகவும் அதனை காவலர்கள் யாரும் அவமானமாக பார்க்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். காவலர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் எதிர்ப்பார்த்த முன்னேற்றம் இல்லை எனவும் அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் அதுவே உயிர்காக்கும் மருந்து என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக நாளை முதல் வருகிற 28 ஆம் தேதி வரை மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அந்த முகாமை அனைத்து காவலர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.