PSBB பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? பாஜக தலைவர் எல்.முருகன் ஆவேசம்

PSBB பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? பாஜக தலைவர் எல்.முருகன் ஆவேசம்

PSSB பள்ளி விவகாரத்தில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவதில் எந்த நியாயமில்லை என்றும், அரசு பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்கள் நடக்கத்தான் செய்கிறது அதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு ஏற்க முடியுமா? என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்

சென்னை அமைந்தகரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் தமிழக பாஜக தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 8 வது ஆண்டில் மத்திய அரசு  அடியெடுத்து  வைக்கும் இந்த தினத்தை சேவை தினமாக கொண்டாடி வருவதாகவும், 7 வருடமாக பிரதமர் மோடி சிறந்த ஆட்சியை நடத்தி வருவதாகவும் பல்வேறு மக்கள் நலன்  திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். 

மேலும், கொரோனா தடுப்புப் பணிகளில், திமுக அரசு தவறான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஊரடங்கு போடுகிறோம் என்று தவறான நடவடிக்கையை எடுத்து, கொரோனாவை பரப்பியது தமிழக அரசு. ஓட்டு போட்டவர்கள், போடாதவர்கள் என்று பிரித்து ஓர் அமைச்சர் பேசுவது தவறானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சர் சேகர்பாபு பேசியது தவறு என்றும் ஓட்டுப் போட்டவர்கள் போடாதவர்கள் என அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் எனக்கூறினார்.

திமுக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக செயல் படுத்தவில்லை என்றும், இன்று தடுப்பூசி இல்லை என்பவர்கள் தான் அதுபற்றிய சந்தேகத்தை முன்பு எழுப்பினர்.தடுப்பூசி வீணானதற்கு அனைவருமே பொறுப்பு. தடுப்பூசிகள் வர வர அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு தடுப்பூசிகளை பாரபட்சமின்றி வழங்குகிறது கொடுக்கப்பட்ட தடுப்பூசிகள் முறையாக அரசு பயன்படுத்துவதில்லை என்றும் மக்கள் கொரோனா தடுப்பூசி போடாமல் தயங்கியதற்கு திமுக தான் காரணம் என கூறினார். 

மேலும் PSSB பள்ளி பாலியல் அத்துமீறல் தொடர்பாக யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது... ? என்றார். கோவை, சேலத்தை திமுக அரசு புறக்கணிக்கிறது. அதனால் தான் போதிய தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை.அனைத்து பகுதிகளிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும். எனக்கு ஒன்றிய அரசு என்றால் என்னவென்று தெரியவில்லை.மத்திய அரசு என்று சொல்லுங்கள் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், வேளாண் சட்டங்களை எந்த விவசாயியும் எதிர்க்கவில்லை என்றார். மேற்கு வங்காளத்தில் பட்டியலின மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.அதைப்பற்றி ஏன் இங்குள்ளவர்கள் பேசவில்லை லட்சத்தீவில் ஆயுதக் கடத்தல் நடந்திருக்கிறது என்றும் தேசப் பாதுகாப்பை முன்வைத்தே, பல்வேறு சட்டங்களை லட்சத்தீவில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்துக்கு அழைப்பே இல்லாமல், அழைக்கவில்லை; அதனால் நான் போகவில்லை என்று அமைச்சர் கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் செயல். கோயில்களில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றார்.