வள்ளல் பி.டி.லீ. செங்கல்வராய நாயகரின் 148 –வது நினைவுதினம் இன்று!

வணிகம் ஒன்றுதான் தமிழர்களை உயர்த்தும் எனக் கருதிய நாயகர் பல நண்பர்களுடன் இணைந்து வணிகத்தில் முழுமையாக ஈடுபட்டார்.

வள்ளல் பி.டி.லீ. செங்கல்வராய நாயகரின் 148 –வது நினைவுதினம் இன்று!

சென்னை, வேப்பேரியில் உள்ள பி.டி.லீ செங்கல்வராய நாயகர் கல்வி நிறுவனங்களில் அவரது 148 –வது நினைவுதினம்  இன்று அனுசரிக்கப்பட்டது. முன்னதாக இந்நிகழ்வில்  செங்கல்வராய நாயகர் அறக்கட்டளையின் தலைவர் நீதியரசர்  திரு.பொன். கலையரசன் நாயகரின் திருவுறுவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

செல்வந்தராக உயர்ந்தார்

1829 – 1874 இல் காலங்களில் சென்னை, சூளையில் உள்ள காலின்ஸ் சாலையில் வசித்தவர் பி.டி.லீ செங்கல்வராய நாயகர். இவர் அக்காலத்தில் செயல்பட்ட ஆங்கிலேய  கம்பெனியான   ’ஷாண்ட் அன் கோ’ நிறுவனத்தில்  துபாஷியாகப் பணியாற்றியவர். பிறகு அந்த நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்துள்ளார். இந்நிறுவனம் மஞ்சள், பருத்தி, மிளகு, எட்டிக்கொட்டை  மற்றும் தோல் பொருட்களை தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இதன்மூலம் செங்கல்வராய நாயகர் மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரும் செல்வந்தராக மாறினார். 

ஒரிசாவிற்கு உதவி

இவரது தந்தை பெருமாள் நாயகரும் ஆங்கிலேய ராணுவத்தில் சுபேதார் மேஜர் பதவியில் பணியாற்றியவர். ஆகையால் இவர் அக்காலத்திலேயே பெரும் செல்வச் சீமான்களும் உயர்சாதியினரின் வீட்டுப்பிள்ளைகள் கல்வி கற்ற, எழும்பூர்  எடின்பர்க் பிரிசிடென்சி கல்லூரியில் கல்வி கற்றவர். இதன்மூலம் பன்மொழிப் புலமையை இவர் அக்காலத்தில் பெற்றிருந்தார்.  1866 ஆம் ஆண்டு ’ஒரிசா’ மாநிலத்தில் ஏற்பட்ட  பஞ்சம்  இந்தியாவையே உலுக்கியது. ஆங்கிலேயர் இந்தியாவில் இருந்த பல செல்வந்தர்கள் பலரின் உதவியை நாடினர்.  அப்போது நாயகர் பெருமளவில் மருந்துப்பொருட்கள், உணவு, உடை போன்றவற்றை தமிழகத்திலிருந்து ஓரிசாவில் வாடும் மக்களுக்கு அனுப்பி வைத்ததுடன் தமிழகத்திலும் கஞ்சித்தொட்டிகள் திறந்து பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றினார்.  

இலவச கல்விச் சேவை

அத்துடன்  வணிகம் ஒன்றுதான் தமிழர்களை உயர்த்தும் எனக் கருதிய நாயகர் பல நண்பர்களுடன் இணைந்து வணிகத்தில் முழுமையாக ஈடுபட்டார். இதன்காரணமாக சென்னை, வேப்பேரியில்  அவர் பெயரில் பல்தொழில்நுட்ப கல்லூரி ஒன்றையும் அக்காலத்திலேயே ஏற்படுத்தினார். இது இந்தியாவில் தொடங்கப்பட்ட இரண்டாவது தொழில்நுட்ப கல்லூரியாகும் (தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி). மேலும் இவர் தன்வாழ்நாளில் சேமித்து வைத்த சொத்துக்களை எல்லாம் ஏழை, எளிய பிள்ளைகளின் கல்விக்காகவும் ஏழைகளின் மருத்துவத்திற்காக உயில் எழுதி சென்றுள்ளார்.

இதன்மூலம் இன்றைக்கு ’பி.டி.லீ செங்கல்வராய நாயகர் அறக்கட்டளை’ என்ற அவர் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தப்பெற்று செயல்பட்டுவருகிறது. இந்த அறக்கட்டளை மூலம்  இலவச ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி, சிறார் காப்பகம், பல்தொழில் நுட்ப கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழிற்கல்வி போன்ற கல்வி நிறுவனங்களும் இலவச  சித்த மருத்துவமனை, தர்ம சத்திரம், மாணவர்களுக்கு நிதியுதவிகள் போன்றவையும் வழங்கப்பட்டுவருகின்றன. 

இன்று நினைவுநாள்

19 –ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த  வள்ளல் பி.டி.லீ செங்கல்வராய நாயகரின் நினைவுநாளான இன்று சென்னை, வேப்பேரி கல்வி நிறுவனத்தில் இலவச கண் சிகிச்சை முகாம், தோல் நோய் சிகிச்சை முகாம் ஆகியன நடைபெற்றன. அத்துடன் 2000 மாணவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள் கல்விநிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவல உதவியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர். 

கட்டுரையாளர் : முனைவர் அ.அமுல்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, வள்ளல் பி.டி.லீ .செங்கல்வராய நாயகர் கலை, அறிவியல் கல்லூரி, சென்னை.