தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை பெற மதம் அடிப்படை இல்லை என்றும், அவ்வாறு மதத்தை அடிப்படையாக வைத்து எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது எனவும் கூறியுள்ளார்.
நாட்டில் நிலைபெறும் மதச்சார்பின்மை கோட்பாடு மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குடியுரிமை திருத்த சட்டம் உகந்ததாக இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், இணைந்து வாழ்பவர்களை பிரித்து வைக்கும் வகையில் இந்த சட்டம் உள்ளதாகவும், இஸ்லாமியர்கள் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அகதிகளாக வரும் மக்களை சக மனிதர்களாக பார்க்க வேண்டும் என்றும், ஆனால் இந்த சட்டம் அவர்களை பாகுபடுத்தி பார்க்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டம் மூலம் இலங்கை தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத சார்பின்மைக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கும் இந்த சட்டத்தை எதிர்ப்பதாக கூறியுள்ளார்.
எனவே இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019-ஐ ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ள அவர், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க தைரியம் இல்லாததால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
இதனையடுத்து, மத்திய அரசின் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிரான தீர்மானம், தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.