தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார்.
வாக்காளர் அட்டையில் குறைகளை சரி செய்யும் பணி :
தமிழகத்தில் ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை சரிசெய்யும் பணி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி ஆகியவை நடந்து வருகிறது.
விழிப்புணர்வு பேரணி :
சென்னை மயிலாப்பூரில் உள்ள செவித்திறன் மாற்றுத்திறனாளி சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பேரணியை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். நூறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் மிதி வண்டி ஓட்டி பதாகைகள் ஏந்தி தேர்தல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பு :
அதன்பின்னர் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒருங்கிணைந்த வரைவு பட்டியல் வெளியிடபட்டுள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் இரண்டு நகல்கள் கொடுக்கப்படும். மொத்தமாக தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 303,95,103 - ஆண் வாக்காளர்களும் 314,23,321 - பெண் வாக்காளர்களும், 7758 - மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். மேலும், 6,66,464 லட்சம் என அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. 1.72 லட்சம் வாக்காளர்களுடன் குறைந்த வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் தொகுதி உள்ளது என தெரிவித்தார்.
சிறப்பு முகாம் :
மேலும் பேசிய அவர், இந்த நவம்பர் மாதத்தில் 12,13 மற்றும் 26, 27 ஆகிய நான்கு நாட்களில் சிறப்பு முகங்கள் நடைபெறும். இந்த முகாமினை பயன்படுத்தி பெயர்கள் திருத்தம் செய்வதற்கும், புதிதாக சேர்வதற்கும் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி நடைபெறும் என்றும் இன்று முதல் அடுத்த மாதம், டிசம்பர் 8-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என வும் தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு :
தொடர்ந்து, இரட்டை பதிவு, மூன்று பதிவு அல்லது இரண்டு தொகுதிகளில் ஒரே வாக்காளர் இருப்பது போன்ற வாக்காளர்களின் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கி உள்ளோம். அதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2.44 லட்சம் இறந்த வாக்காளர்கள் பெயர்கள்,15.25 லட்சம் இரட்டை பதிவு வாக்காளர்கள் பெயர்கள், இரட்டை பதிவு, இறந்தவர்கள் என மொத்தமாக 17.69 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A பூர்த்தி செய்து நேரில் அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
புதிய வாக்காளர்கள் :
18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6ல் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய நான்கு மாதங்களிலும் முதல் தேதியில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழகத்தில் 3.46 கோடி ஆதார் எண்கள் வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக சென்னையில் 20% நபர்கள் மட்டுமே தங்கள் ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.