கரூர் அருகே செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் கோட்டாட்சியர் ஆய்வு!

கரூர் அருகே செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் கோட்டாட்சியர் ஆய்வு!

கரூர் மாவட்டம் புகழூர் வட்டத்திற்கு உட்பட்ட புன்னம், பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் கற்கள், ஜல்லிகள், எம்.சேண்ட் போன்றவைகள் தயார் செய்யப்பட்டு கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி இன்றி செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், கல் குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை சமூக ஆர்வலர்கள் மூலம் விடுக்கப்பட்டது. இதனடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா தலைமையில், வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட வருவாய் துறையினர் புகழூர் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் செயல்படும் கல்குவாரிகளை ஆய்வு செய்தனர்.

புன்னம் சத்திரம் கிராமத்தில் செயல்படும் கந்தசாமி புளுமெட்டல் கல்குவாரியை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார். சர்வே எண், குவாரிக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமம், அவர்களது எல்லை, கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட ஆழம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

இன்று 8 கல்குவாரிகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், காலை முதல் 4 கல் குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்து 4 கல் குவாரிகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும், தவறுகள் கண்டறியப்படும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.