தமிழகத்தில் கொரொனா 2 ஆம் அலையின் பாதிப்பு படிபடியாக குறைந்து வரும் நிலையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசி வர இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், இதுவரையும் இரண்டு தவணையாக 7 லட்சத்து 86 ஆயிரத்து 610 தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழகத்திற்கு தடுப்பூசி வராத நிலையில், அடுத்தகட்டமாக வரும் 10 தேதிக்கு மேல் மத்திய கிடங்கிலிருந்து தடுப்பூசிகள் அனுப்பப்படும் என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை 1 கோடியே 58 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று தமிழக அரசின் கையிருப்பில் 63 ஆயிரத்து 460 தடுப்பூசி மட்டுமே இருப்பதால் தடுப்பூசி போடும் பணிகள் முடங்கியுள்ளன. இதனால், பொது மக்களிடையே தடுப்பூசி போட ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.