பிரிந்து கிடக்கும் அதிமுக தலைவர்களை ஒன்றுபடுத்துவேன்...சொன்னது யார் தெரியுமா?

பிரிந்து கிடக்கும் அதிமுக தலைவர்களை ஒன்றுபடுத்துவேன்...சொன்னது யார் தெரியுமா?

சிவகாசியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நலத்திட்ட உதவிகள்

இந்நிகழ்ச்சியில் அதன் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர்சூட்ட வேண்டுமென அதிமுக மற்றும் திமுக இரு ஆட்சிக்காலங்களின் போதும் கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

கொரோனா பெயரில் தடுக்கப்படும் அரசியல் நிகழ்வுகள்

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த கொரோனா விதிமுறையை காரணம் காட்டி தற்போதைய தமிழ்நாடு அரசு சார்பாக தடை செய்யப்பட்டுள்ளது.ஆனால் உலகத் தலைவர்களை எல்லாம் அழைத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தும் போது மட்டும் கொரோனா வியாதி இருப்பது தெரியவில்லை என கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாட்டில் சாதி வாரியாக கணக்கெடுத்து ஒவ்வொரு சாதியின் மக்கள் தொகை சதவீதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது எங்களது நீண்ட கால கோரிக்கை என்றார்.

அதிமுக தலைவர்களை ஒன்றிணைப்பேன்

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி வட்டாரத்தில் உள்ள பிரபலமான பட்டாசு தீப்பெட்டி மற்றும் அச்சு தொழில்கள் நலிவடைந்து அழிந்து வருகிறது. இதற்கென இப்பகுதி மக்களுக்கு மாற்றுத் தொழிலும் இல்லை அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டும் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் பின்தங்கி இருப்பதால் இங்குள்ள இளைஞர்கள் சென்னை, திருப்பூர், கோவை போன்ற நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வேலை தேடிச் செல்லும் அவல நிலையே உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இன்றைய தினம் அரசியல் கட்சிகளோடு சமுதாய தலைவர்களும் ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் நிலையில். சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் சமுதாய தலைவர்களையும் ஒன்றிணைத்து பொதுக்கூட்டம் நடத்துவேன் என்றார்.