போராட்டத்தில் குதித்த பெரியார் திராவிடர் கழகத்தினர்...ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்...!

போராட்டத்தில் குதித்த பெரியார் திராவிடர் கழகத்தினர்...ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்...!
Published on
Updated on
1 min read

ஆளுநர் ஆர்.என். ரவியின் உருவ பொம்மையை எரித்து தமிழகம் முழுவதும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆளுநருக்கு எதிராக போராட்டம் :

தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து தெரிவித்து வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, அம்பேத்கர், காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை வாசிக்காமல் புறக்கணித்தார். இந்நிலையில் ஆளுநரின் இந்த செயல்களைக் கண்டித்து, தந்தை  பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுநர் உருவ பொம்மை எரிப்பு:

அந்த வகையில் கோவை மாவட்டம் காந்திபுரம் திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநர் உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

இதேபோன்று திருப்பூர் மாவட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆளுநர் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆளுநர் ரவியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதனைத் தடுத்து நிறுத்திய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். 

இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு:

அதேபோல், புதுச்சேரி காமராஜர் சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com