தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, சென்னையில் கிண்டி, முகலிவாக்கம், போரூா், ஆயிரம் வியக்கு, பாாிமுனை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இரவில் மழை வெளுத்து வாங்கியது. தொடா்ந்து பெய்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.
குறிப்பாக கிளாம்பாக்கம் பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் சாலை முழுவதும் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் ஊா்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதானல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனா். மேலும் வாகனங்கள் பழுதாகி நின்றதால் அதனை தள்ளி செல்லும் நிலை ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் மழைநீரானது கழிவுநீர் கால்வாயில் கலந்தது. இந்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடுமையான வெயிலுக்கு இடையே செய்யாறு, வடதண்டலம், கீழ்ப்புதுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், சாலைகளில் பயணிப்போர் மிகுந்த இன்னலுக்கு ஆளாயினர்.