வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து நாளை தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : "ED அதிகாரி கைது செய்யப்பட்டதை அரசியலாக்கக் கூடாது" - அண்ணாமலை
மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழ்நாடு கடற்கரையை அடையும் என்றும், 5ஆம் தேதி பிற்பகலில் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, நந்தனம், சென்ட்ரல், பாரிமுனை, அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழையும், பெரம்பூர், கொளத்தூர், அயனாவரம், வில்லிவாக்கம், பகுதிகளில் கனமழையும் பெய்தது.